All India Anna Dravida Munnetra Kazhagam

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இந்த காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு  இதுவரை ஒரு பங்கை அளித்து வந்தது. இப்பொழுது அந்த Police Modernisation  என்ற திட்டத்தையே மத்திய அரசு கைவிட்டுவிட்டது. இனிமேல் காவல்துறையை நவீனப்படுத்த வேண்டுமென்றால் முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியை வைத்துத்தான் அதை செய்ய வேண்டும். அது தான் இன்றைய நிலைமை.

மாண்புமிகு உறுப்பினர் திரு. சவுந்தரராசன் அவர்கள் பேசுசின்றபோது சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டதாக, அதாவது அவர்களுடைய கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தாக்கப்பட்டதாக இங்கே தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அதைப்பற்றிய உண்மை நிலைமையை நான் இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அவர் குறிப்பிட்ட போராட்டத்தில் வேலை நிறுத்த தினத்தன்று, சிதம்பரம் இரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையிலும், காலை சுமார் 11 மணியளவில் ஒரு சங்கத்தைச் சார்ந்த சுமார் 65 பேர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சிதம்பரம் இரயில் நிலையத்திற்குள் மறியல் செய்யும் நோக்குடன் செல்ல முயன்றவர்களை சுமார் 100 மீட்டர் தொலைவில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து அவர்கள் மேலும் செல்ல விடாமல் தடுத்துள்ளனர். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மேற்படி தடுப்புகளை நகர்த்திவிட்டு இரயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றுள்ளனர். அப்போது சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சட்டமன்ற உறுப்பினரிடம் இரயில் நிலையத்திற்கு உள்ளே சென்று போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறியுள்ளார். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் காவல் துறையினரிடம், ‘யார் உத்தரவில் எனக்கு அனுமதி மறுக்கிறீர்கள்’ என்று கேட்டு துணைக் கண்காணிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அதே இடத்தில் தரையில் படுத்தவாறு காவல் துறையினருக்கு எதிராக கோஷமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் போராட்டத்தில் மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர். காவல் துறையினர், அவர்களிடம் பலமுறை கேட்டுக் கொண்டும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து கோஷமிட்டு பொதுமக்களுக்கும், இரயில் நிலையம் செல்லும் பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியதால் வேறு வழியின்றி காவல் துறையினர் அவர்களைக் கைது செய்ய முற்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, காவல் துறையினர் தரையில் படுத்த நிலையில் போராட்டம் செய்து கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

பின்னர், அப்புறப்படுத்தப்பட்டவர்களை திருமணக் கூடம் ஒன்றில் கொண்டு சென்று வைத்திருந்தபோது, சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் மூன்று உறுப்பினர்கள் தங்களுக்கு உடலில் வலி ஏற்பட்டுள்ளதாகக் கூறியதன் பேரில், அவர்களை காவல் துறையினர் உடனடியாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து, சிகிச்சை அளித்தனர். அப்புறப்படுத்தப்பட்ட அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினர் திரு. க. பாலகிருஷ்ணன் அவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கூட்டிச் சென்ற போது, தனக்கு முதுகு வலி இருப்பதாக கூறியதையடுத்து, அவர் அண்ணாமலை நகரிலுள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் 3.9.2015 அன்று காலை அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பினார்.

சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களைக் காவல் துறையினர் யாரும் தாக்கவில்லை. அவர், சிதம்பரம் இரயில் நிலையம் முன்பு தரையில் படுத்து மறியல் செய்து, போக்குவரத்திற்கு தடை செய்தபோது, காவல் துறையினர் அவரைப் பலமுறை கேட்டுக்கொண்டும், கலைந்து செல்லாமல் தொடர்ந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு விளைவித்து மறியலில் ஈடுபடவே, காவல் துறையினர் அவரை அப்புறப்படுத்த முயன்ற போது, காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால், வேறு வழியின்றி திரு. பாலகிருஷ்ணன் அவர்களைப் பலவந்தமாக அப்புறப்படுத்தி உள்ளனர். இதனை வைத்து காவல் துறையினர் திரு. பாலகிருஷ்ணனைத் தாக்கியதாக கூறுவது ஏற்புடையதல்ல.

மேலும், அன்று சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ராமமூர்த்தி மற்றும்  திரு. தளி இராமச்சந்திரன் ஆகியோர் விழுப்புரம் மற்றும் ஓசூர் இரயில் நிலையம் அருகில் மறியல் செய்ய முயன்றதாகவும், சட்டமன்ற உறுப்பினர் திரு.டில்லிபாபு அரூர் அருகில் சாலை மறியல் செய்ய முயன்றதற்காகவும், காவல் துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்புறப்படுத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், அன்றைய தினம் சட்டமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தபோது, சில சட்டமன்ற உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்து காமராஜர் சாலையில் சாலை மறியல் செய்ய வந்த போது, காவல் துறையினர் தலைமைச் செயலக வெளிவாயில் அருகில் தடுப்புகளை வைத்து தடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தடுப்புகளை மீறி சாலைக்கு செல்ல முயன்றுள்ளனர். அப்போது, காவல் துறையினர் சட்டமன்ற உறுப்பினர்களை சாலைக்கு செல்லவிடாமல் தடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் வெளிவாயில் அருகில் சிறிது நேரம் அமர்ந்து தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தின் போதும் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் காவல் துறையினரால் தாக்கப்படவில்லை.

தமிழகத்தில் 2.9.2015 அன்று நடைபெற்ற பொது வேலைநிறுத்த மறியல் போராட்டத்தின்போது திரு. பாலகிருஷ்ணன் உட்பட எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் காவல் துறையினரால் தாக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.

இங்கே அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். யாராவது நினைப்பார்களா. அப்படியெல்லாம் செய்வாரென்று. மேற்படி போராட்டங்களில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் காவல் துறையினர் தங்களைத் தாக்கியதாக புகார் ஏதும் தெரிவிக்கவில்லை.