All India Anna Dravida Munnetra Kazhagam

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மாண்புமிகு மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் பேசுசின்றபோது மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று கூறினார். அதற்கு நான் விடை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, 2014 ஆம் ஆண்டு மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கு எதிராக 171 கொலை வழக்குகள் தாக்கலாகியுள்ளன. அதே அறிக்கையின்படி தமிழ்நாட்டில் மூத்த குடிமக்களின் மொத்த எண்ணிக்கை 75.1 லட்சம் என்றும், இந்த எண்ணிக்கையில் நமது மாநிலம் நான்காவது இடத்தில் உள்ளது. இவர்களுக்கு எதிராக நமது மாநிலத்தில் நடந்த கொலைகளின் சதவீதம் 2.3 என்ற அடிப்படையில் உள்ளது. மூத்த குடிமக்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, நமது மாநிலத்தில் அதிகமாக இருப்பினும், கொலை குற்றங்களின் தேசிய சராசரியான 2.7 சதவீதத்தைவிட குறைவாகவே உள்ளது.

இதே போன்று, மூத்த குடிமக்களுக்கு எதிராக கொலை முயற்சி வழக்குகள் தமிழகத்தில் 64 தாக்கலாகியுள்ளன. மூத்த குடிமக்களுக்கு எதிராக நடந்த கொலை முயற்சி குற்றங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் குற்ற விகிதம் 0.9 ஆகும். அதே போன்று, கொலை முயற்சி குற்றங்களின் தேசிய சராசரியான 3.4 சதவிகிதத்தைவிட மிகவும் குறைவாகவே உள்ளது.

மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டு மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 2,121 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. ஆனால், இவ்வழக்குகள் மகாராஷ்டிராவில் 3,981-ம், மத்திய பிரதேசத்தில் 3,438-ம் தாக்கலாகியுள்ளன.

அதேபோல், 2014 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1,805 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டில் 1,936ஆக பதிவாகியிருந்த கொலைச் சம்பவங்கள், 2014 ஆம் ஆண்டில் 7 சதவிகிதம் குறைந்து தென் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில்தான் உள்ளது. அண்டை மாநிலமான தெலுங்கானா முதலிடத்திலும், கர்நாடகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. மேலும், தேசிய அளவிலும் நமது மாநிலம் குற்ற சதவிகித அடிப்படையில் பதினாறாவது இடத்தில் தான் உள்ளது.

இதேபோன்று, கொலை முயற்சி குற்றங்களைப் பொறுத்தவரை 2013ஆம் ஆண்டு 3,007 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில் 2014 ஆம் ஆண்டில் 2,922 வழக்குகளே தாக்கலாகி உள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.83 சதவிகிதம் குறைவாகும். எனவே, கொலை மற்றும் கொலை முயற்சி குற்றங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு தாக்கலான குற்றங்களைக் காட்டிலும் 2014 இல் குற்றங்கள் குறைந்தே காணப்படுகின்றன.