“1969 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைந்தார். மறைந்ததும், புரட்சித்தலைவரை சந்தித்து தன்னை ஆதரிக்க வேண்டிய கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று, தானே முன்னின்று ஆதரவு திரட்டி, அவரை முதல்வராக்கினார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.
மீண்டும் 1971 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக சார்பில், கருணாநிதி முதல்வர் வேட்பாளர். ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை நம்பித்தான் சாதாரண பாமர மக்கள் புரட்சித்தலைவரின் ஆதரவு பெற்ற திமுகவை, இமாலய வெற்றி பெற வைத்தனர். திமுக ஆட்சியைப் பிடித்ததும், கருணாநிதியின் குணம் மாறியது.
பேரறிஞர் அண்ணாவின், பெரும் பயணத்தில் உடனிருந்த பெருந்தலைவர்கள் பலரும், கருணாநிதி தலைமையிலான திமுகவின் நடவடிக்கைகள், அண்ணாவின் இலட்சியத்திற்கு எதிராக இருப்பதாக புரட்சித்தலைவரிடம் முறையிட்டனர். லட்சக்கணக்கான தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை 23 பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்டு நீக்கினார் கருணாநிதி.
அண்ணாவின் இலட்சியத்தை அப்படியே விட்டுவிடமுடியாதென சூளுரைத்த புரட்சித்தலைவர், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட, ஏழே நாட்களில், மதுரை தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் அண்ணாவின் அரும்பெரும் கொள்கைகளைப் பின்பற்றி, அண்ணாவின் அடியொற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் “