Skip to main content
ADMK History

தமிழ்நாட்டு மக்கள் தம் அடிப்படை உரிமைகளை சமரசமின்றி பெற்றிடவும், சமத்துவத்தையும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தையும், முழுமையாகப் பெற்று பயனடையவும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், 1972 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், என்கிற பேரியக்கத்தைத் தொடங்கினார்.

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு என்பது, சமூகநீதியின் முதற்கூறான, ‘அனைவரும் சமம்’ என்கிற ஆகப்பெரும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த மாபெரும் மாளிகையாகும்.

அடித்தட்டு மக்களும் அரசாங்கத்தின் அங்கமாதலே, மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை என்பதை உணர்ந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், ஏட்டைத் தொடாத எளியவரையும், கோட்டையைத் தொடவைப்பதே இலக்கு என்ற அண்ணாவின் கொள்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு கழகத்தைத் தோற்றுவித்தார்.”

பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை, அண்ணாவின் இலட்சியத்தை அண்ணாவின் பேரிலக்கை, அண்ணாவின் அரசியல் வழிமுறையை அடிப்படையாகக் கொள்ளாத,

அண்ணா அவர்கள் போற்றிக் காத்த நேர்மை, அறம் போன்ற பண்புகள் எவையும் துளியும் இல்லாத, கருணாநிதியின் தலைமையிலான திமுகவால்,

 தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்க இயலாது என்பதை, பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களின் மூலம், உணர்ந்த புரட்சித்தலைவர் அவர்கள், கருணாநிதி தலைமையிலான திமுகவை, தமிழ்நாட்டின் ‘தீயசக்தி’ என விமர்சித்து அவரின் உண்மை முகத்தை அடையாளப்படுத்தி, அம்பலப்படுத்தி, தமிழ் மக்களின் நலனுக்காக, தமிழ் மக்களின் ஏகோபித்த பேராதரவுடன் தொடங்கிய இயக்கம் தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கம்.”

“1969 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைந்தார். மறைந்ததும், புரட்சித்தலைவரை சந்தித்து தன்னை ஆதரிக்க வேண்டிய கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று, தானே முன்னின்று ஆதரவு திரட்டி, அவரை முதல்வராக்கினார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.

மீண்டும் 1971 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக சார்பில், கருணாநிதி முதல்வர் வேட்பாளர். ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை நம்பித்தான் சாதாரண பாமர மக்கள் புரட்சித்தலைவரின் ஆதரவு பெற்ற திமுகவை, இமாலய வெற்றி பெற வைத்தனர். திமுக ஆட்சியைப் பிடித்ததும், கருணாநிதியின் குணம் மாறியது.

பேரறிஞர் அண்ணாவின், பெரும் பயணத்தில் உடனிருந்த பெருந்தலைவர்கள் பலரும், கருணாநிதி தலைமையிலான திமுகவின் நடவடிக்கைகள், அண்ணாவின் இலட்சியத்திற்கு எதிராக இருப்பதாக புரட்சித்தலைவரிடம் முறையிட்டனர். லட்சக்கணக்கான தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை 23 பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்டு நீக்கினார் கருணாநிதி.

அண்ணாவின் இலட்சியத்தை அப்படியே விட்டுவிடமுடியாதென சூளுரைத்த புரட்சித்தலைவர், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட, ஏழே நாட்களில், மதுரை தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் அண்ணாவின் அரும்பெரும் கொள்கைகளைப் பின்பற்றி, அண்ணாவின் அடியொற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் “

1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தல் எனும் அறிவிக்கப்படாத போர் போன்ற ஒரு சூழலில், அஇஅதிமு கழகம் பிறந்த ஆறே மாதத்தில் போட்டியிட்டு  தன்னை நிலைநிறுத்த வேண்டிய மிகப்பெரும் கட்டாயத்தில் சிக்கியது. ஆறு மாத குழந்தையை வீழ்த்த, அரைநூற்றாண்டு கட்சியான மத்தியில் ஆளும் காங்கிரசும், கால் நூற்றாண்டு கட்சியான மாநிலத்தை ஆளும் திமுகவும் செய்த பகீதர பிரயத்தனங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக வீழ்த்திக்காட்டியது கழகம். ஆளும் திமுக மூன்றாம் இடம் சென்றது. எம்ஜிஆர் இல்லாத திமுக, உயிரில்லாத உடலாகிப்போனது வரலாறு.

எல்லாக் கட்சிகளும் ஆரம்பித்து அதன் பின்பு வளரும். அண்ணாதிமுக என்கிற பெரும் இயக்கம் மட்டுமே தானாகத் தோன்றி தமிழ்நாட்டின் தலவிருட்சமான கட்சி. அதனால் தான் அஃது பேரியக்கம் என்றழைக்கப்படுகிறது.

1977 சட்டமன்ற பொதுத்தேர்தலில் முதன் முறையாக வெற்றி பெற்று, கட்சி ஆரம்பித்த ஐந்தே ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஆட்சியைப்பிடித்த, ஒரே இயக்கம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சரித்திரம் படைத்தது. பல்வேறு அரசியல் சூழல்களில் மத்திய அரசின் ஆட்சி கலைப்பு அரசியல் சூழ்ச்சிகளை முறியடித்து, மீண்டும் 1980 , 1984 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றது கழகம். அதற்கு முன்பே புதுச்சேரியில் 1974 இல் முதன் முதலாக கழகம் ஆட்சியைப் பிடித்தது. முதல் தேர்தலிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களை வென்றெடுத்த ஒரே திராவிட இயக்கம் அஇஅதிமுக மட்டுமே.

1987 தமிழ் மக்களின் இதயமாக விளங்கிய புரட்சித்தலைவர் எம்ஜியார் உடல்நலக்குறைவால் மறைந்தார். இடியென இச்செய்தி உலக தமிழர்களின் இதயத்தை இறங்கியது.

1989 நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் இரண்டாக பிளவுற்றதால் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், புரட்சித்தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள், மீண்டும் கழகத்தை ஒன்றாக்கி,  சட்டமன்ற தேர்தல் திமுக வென்று ஆட்சியமைத்த ஆறே மாதங்களில் நடைபெற்ற மருங்காபுரி, மதுரை கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரச்சாரத்துக்கு செல்லாமலே கழகம் இரு தொகுதிகளிலும் வென்று மீட்டெடுத்தது.

1989 மக்களவைத் தேர்தலில் புரட்சித்தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அம்மா அவர்களின் தலைமையில் 38 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று கழகம் முன்னிலும் பலமாக மீண்டெழுந்து. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பின்பும் காங்கிரஸ் தேசிய அரசியலில் பெற முடியாத வெற்றியை, புரட்சித்தலைவியின் புனிதத் தலைமையில்  அண்ணாதிமுக தமிழ்நாட்டில் பெற்றது என்பதையும் இதன் மூலம் உணரலாம். சூது வென்ற கழகம் 1989ம் ஆண்டிலேயே வெற்றிக்கணக்கை மீண்டும் துவங்கிவிட்டதே உண்மை வரலாறு.

அதன் பிறகு நடைபெற்ற, 1991, 2001, 2011, 2016 , சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றியை பெற்றது. புரட்சித்தலைவர் வழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆளுகிற அரும்பெரும் வாய்ப்பைப் பெற்றது கழகம் புரட்சித்தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் தலைமையில்.

முத்தாய்ப்பாக 2014 இல் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில், எந்தக்கட்சியையும் கூட்டணி சேர்க்காமல், தன்னந்தனியாக, கட்சியின் வெற்றி சின்னமாம் இரட்டை இலை, தமிழ்நாட்டில் 37 இடங்களைப்பெற்று இந்தியாவின் மூன்றாவுது பெரிய கட்சியாக முன்னேறி நின்றது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி 37 இடங்களை வென்றது இதுவே முதல் முறை என்பதும் வரலாறு.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 இல் உடல்நலக்குறைவால், முகராசி கொண்ட மகராசி என தமிழ்நாட்டு மக்களால் மனதார பெருமையோடு புகழப்பட்ட புரட்சித்தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் இயற்கை எய்தினார்.

அதன்பிறகு கட்சியையும் ஆட்சியையும் திறம்பட வழிநடத்த வந்தார், புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களுக்கு பக்தனாகவும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நம்பிக்கைக்குரிய, படைத்தளபதியாகவும் விளங்கிய, மிகச் சாதாரண பின்னணி கொண்ட, குடிமராமத்து நாயகன், இட ஒதுக்கீட்டு இளவரசன், தமிழ்நாட்டின் தலைசிறந்த நிர்வாகி என்றெல்லாம் தமிழ்நாட்டு மக்களால் போற்றப்படும் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்.

அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு, எளியவர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஆட்சியை கலைத்துவிடத் துடித்த எதிரிகளின் அத்துணை அரசியல் ஆட்டங்களையும் அசராமல் நின்றடித்து, 2019 இல் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்களில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு தேவையான ஒன்பது இடங்களை வென்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரானார் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

கழகத்தை வழிநடத்தும் பெரும் பொறுப்பை ஏற்று, 2021 இல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், பத்தாண்டு கால ஆட்சியின் எதிர்மறை கருத்துக்களையும் சமாளித்து, ஒரு சில துரோகிகளின் துரோகச் செயல்களையும் சமாளித்து, ஒரு எளிய மனிதர் முதல்வராவதைத் தடுக்க ஏகபோக ஊடகங்களையும் விலைக்கு வாங்கியதையும் மீறி, பீஹாரிலிருந்து மூளைகளை இறக்குமதி செய்ததையும் மீறி, தன் தலைமையில் கூட்டணி அமைத்து, 75 இடங்களை வென்று காட்டி, கழகம் இன்று வலுவான எதிர்க்கட்சியாக, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சியாக, தமிழ்நாட்டுமக்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

2026 இல் மீண்டும் கழகத்தை ஆட்சியில் அமர்த்த கழகத்தின் பொதுச்செயலாளர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வியூகமமைத்து செயலாற்றி வருகிறார்.

தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் வைத்து தொடங்கிய இவ்வியக்கத்தின் பயணம், மூன்றாம் தலைமுறை தலைவராகத் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகப் பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக செயலாற்றி மக்கள் பணி செய்து வருகிறது