தமிழ்நாட்டின் தன்னிகரற்றத் தலைவர், நமது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 1917 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 17 ஆம் நாள், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இயங்கிய, இலங்கையில் உள்ள நாவலப் பெட்டி என்ற ஊரில், கோபாலன் மேனன் – சத்தியபாமா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்பது இயற்பெயர்.
எம்ஜிஆர் தம் இரண்டாம் வயதில் தந்தையை இழந்தார். எனவே தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் அவர் குடும்பம் குடியேறியது. ஆணையடி பள்ளியில் படித்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக சிறுவயதிலேயே நாடகத் துறையில் ஈடுபட்டார். அதன் பிறகு சினிமாத்துறையில் உச்சபட்ச நிலையை அடையுமளவிற்கு மிகக் கடுமையாக உழைத்தார்.
எம்ஜிஆர் தொடக்க காலத்தில், 1940 களில், தேசத்தந்தை காந்தியடிகளிடம் மீது பற்று கொண்டு, கதர் அணிந்து, காங்கிரஸ் இயக்கத்தில் பணியாற்றினார்.
பின்னர், கொள்கை வேந்தன், பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளின் மீதான ஈர்ப்பால், 1953 ஆம் ஆண்டு, தனது 36 ஆவது வயதில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, அண்ணாவின் நெருக்கமான தொண்டரானார்.
திரை உலகில் சுமார் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னனாய் விளங்கினார். எம்ஜிஆர் அவர்கள் தாம் ஏற்ற பாத்திரங்களின் மூலம், சோம்பித்திரியக் கூடாது, பிறரிடம் கையேந்தக் கூடாது, உழைப்பே ஒருவரை உயர்த்தும் என்னும் கருத்துக்களை மக்கள் மனதில் புரியச் செய்தார்.
வெறுமனே நடிகராக மட்டும் இருந்து விடாமல், கேமரா தொழில்நுட்பம், படத்தொகுப்பு, இயக்கம் என பல்வேறு விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து சகலகலா வல்லவனாகத் திகழ்ந்தார். திரையுலகின் தசாவதானி என்ற சொல்லாடலுக்கு பொருத்தமானவரானார்.
புரட்சித்தலைவர் அவர்கள், திரைத்துறையில் இருந்தபோதும், அரசியலில் முழுமையாக ஈடுபட்ட காலகட்டமும், வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிகழ்வும் கூட சரித்திரம் என்று சொன்னால் அது மிகையல்ல.
எம்ஜிஆர் அவர்கள் சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். மொத்தமாக 136 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
புரட்சித்தலைவரின் ஒவ்வொரு திரைப்படமும், அந்த காலகட்ட அரசியலையும், அன்றாட நிகழ்வுகளையும், அண்ணாவின் லட்சியங்களையும், தமிழ்மக்களுக்கான உயர்குணங்களை எடுத்துச்சொல்லும் பாடசாலையாகவும், தான் ஏற்றுக்கொண்ட கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் பிரச்சார யுக்தியாகவும், மக்களோடு நேரடியாகப்பேச தனக்கு கிடைத்த சாதனமாகவும் பயன்படுத்தினார்.
முதன் முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் பரிசு பெற்ற தமிழ்ப் படம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த ‘மலைக்கள்ளன்’. முதன்முதலாக ஆறு மொழிகளில் தயாரான பான் இந்தியா படமும் இதுவே.
முதன்முதல் முழுநீள வண்ணத்தில் தயாரான தமிழ்ப்படம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.
முதன்முதலாக சென்னையில் திரையிடப்பட்ட 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி வெற்றிகண்ட தமிழ்ப் படம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த ‘மதுரை வீரன்’
‘ஹரிதாசு’க்குப் பின் தமிழகத்தில் அதிக நாட்கள் (236 நாட்கள்) ஓடிய ‘எங்க வீட்டுப் பிள்ளை’ சென்னையில் முதன்முதலாக மூன்று தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடிய படமாகும்.
முதன்முதலாக சென்னையில் ஒரே சமயத்தில் 6 தியேட்டர்களில் வெளிவந்த தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மகாதேவி’
முதன்முதலில் ஒரு நடிகர், தானே படம் தயாரித்து, இயக்கி, சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிய தமிழ்ப் படம், எம்ஜிஆர் அவர்கள் நடித்து இயக்கிய திரைப்படம் ‘நாடோடி மன்னன்’
புரட்சித்தலைவரின் படங்களில், நூறு நாட்கள் ஓடிய படங்களின் எண்ணிக்கை 49.
நாடோடி மன்னன், மதுரை வீரன், எங்கள் வீட்டுப்பிள்ளை என ஒவ்வொன்றும் போட்டிபோட்டு வெற்றியடைந்து, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை யாராலும் வெல்ல முடியாத வசூல் பேரரசராக மாற்றியது எனச்சொன்னால் அது மிகையல்ல.
விஞ்ஞான ரீதியில் முயன்று, உண்மையிலேயே பறக்கும் தட்டை செய்து, படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம் எம்ஜிஆர் நடித்த ‘கலையரசி’ திரைப்படமாகும்.
மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிக்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் தமிழ் வண்ணப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் எம்ஜிஆர் அவர்கள் தான் என்ற செய்தி, புரட்சித்தலைவர் அவர்களின் திரையுலக பேராண்மையை பறைசாற்றும் செய்தியாகும்.
திரையில் இப்படி ஓயாமல் கடும் உழைப்பைக் கொட்டி, அதன் மூலம் ஈட்டும் வருவாயை இல்லை என்று வருபவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து ‘எட்டாம் வள்ளல் எம்ஜிஆர்’ என்று சொல்லுமளவிற்கு கொடை வள்ளாலாகவே திகழ்ந்தார் புரட்சித்தலைவர் அவர்கள்.
முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் “நாட்டின் பாதுகாப்புநிதி தாரீர்” என்று கோரியபோது முதன்முதலாக அதிக தொகை (75 ஆயிரம்) கொடுத்தவர், தேசப்பற்றும் கொடைத்தன்மையும் மிக்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான். ஒரு பவுன் தங்கத்தின் அன்றைய விலை 85 ரூபாய். இன்று சுமார் ₹48,000. அன்று புரட்சித்தலைவர் நாட்டுக்காக கொடுத்த பணத்தின் இன்றைய மதிப்பு சுமார் ₹42 கோடி ரூபாய் ஆகும். கொடை வள்ளல் எம்ஜிஆர் என்பதற்கான மிகச்சிறந்த சான்று இதுவேயாகும்.
முத்து முத்தாகவும் கொத்துக் கொத்தாகவும் கருத்துருக்களை சமூகத்திற்கு வாரி வழங்கிய, கருத்துக்குவியலின் பேராசான், காஞ்சித்தலைவன், பேரறிஞர் அண்ணா அவர்கள், 1949 இல் துவங்கிய திமுக, 1952 இல் நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் பங்கேற்கவில்லை. காரணம் பலமிருக்குமா ஆதரவிருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்த முடிவை எடுத்திருந்தார்.
புரட்சித்தலைவர் அவர்கள் 1953 இல் திமுகவில் இணைந்த பிறகு, திமுகவின் கொள்கைகளையும், சின்னத்தையும், கொடியையையும் குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்கும் மிகப்பெரும் பணியை சுயவிருப்பத்தோடு, அண்ணாவின் கொள்கைகளை பரப்பும் அதிகாரபூர்வமற்ற கொள்கைப் பரப்புச் செயலாளராகவே மாறி பிரச்சாரம் செய்தார் நம் புரட்சித்தலைவர்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், திமுக 1957 பொதுத்தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுக்க, புரட்சித்தலைவரின் வருகை ஒரு பெரும் காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல. தொடர்ச்சியாக புரட்சித்தலைவர், தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவும், தலைவனுக்காகவும், எதையுமே எதிர்பார்க்காமல், சூறாவளி கொள்கைப் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
விளைவு, கொள்கைக்கொம்பன் பேரறிஞர் அண்ணாவின் முடிவு, திமுகவின் தொடக்கமாக இருந்தது. ஆம். முதன்முதலாக 1957 பொதுத் தேர்தலில் திமுக 15 சட்டமன்ற இடங்களிலும், 2 நாடாளுமன்ற இடங்களிலும் வெற்றி பெற்றது, அதற்கு அடுத்த தேர்தலில் 52 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சியாகவும், அதன் பிறகு 1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஆட்சியைப் பிடிக்கவும், புரட்சித்தலைவரின் பங்கு அளப்பரியது எனபதை, பேரறிஞர் அண்ணா அவர்களே, வெளிப்படையாகவே, அனைவரின் முன்னிலையிலும் சொன்னது, வரலாற்றுப்பதிவு.
தேர்தலுக்கு நிதி வசூலிக்கும் நிகழ்வின் பொழுது, கருத்தியல் தந்தை பேரறிஞர் அண்ணா சொன்ன அந்த ஒற்றை வரி, நமது புரட்சித்தலைவர் மீது, திமுகவின் தலைவராக இருந்த பேரறிஞர் அண்ணா எந்தளவு நம்பிக்கையும், புரட்சித்தலைவரின் சக்தி என்ன என்பதையும் உணர்ந்திருக்கிறார் என்பது புலப்படும்.
அண்ணா அவர்கள், ” தம்பி ராமச்சந்திரன் கொடுப்பதாக சொல்லப்படும் தொகை பற்றி எனக்கு கவலையில்லை. தம்பி ராமச்சந்திரனின் பணம், என் பணம் போலாகும், அதை எப்பொழுது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்வேன், எனது சட்டைப்பையில் இருக்கும் பணமல்லாவா என்று சொல்லிவிட்டு சொன்னார்,
‘ உன் முகத்தைக் காட்டு தொகுதிக்கும் முப்பதாயிரம் ஓட்டுக்கள் நிச்சயம் கழகத்திற்கு கிடைக்கும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்” பேரறிஞர் அண்ணா அவர்கள்.
அந்தளவுக்கு செல்வாக்கு பொருந்தியவர் நமது இதயதெய்வம் புரட்சித்தலைவர் என்பதை பேரறிஞர் அண்ணா உணர்ந்திருந்தார்.. அதுதான் உண்மை என்று அன்றைய அரசியல் விமர்சகர்கள் பல்வேறு தருணங்களில் எழுதியும் பேசியும் உள்ளார்கள்.
அமைச்சரவைப் பட்டியலை தம்பி ராமச்சந்திரனிடம் காட்டி வாருங்கள் என்று சொன்ன அண்ணாவின் இதயக்கனி நம் புரட்சித்தலைவர்.
1967 வெற்றிக்குப்பிறகு, இரண்டே ஆண்டுகளில் அதாவுது 1969 லிலேயே பேரறிஞர் அண்ணா உடல்நலம் குன்றி மறைய, ஐம்பெரும் தலைவர்களில் பட்டியலில் கூட இல்லாத கருணாநிதி, தான் முதல்வராக வேண்டும் என்றும், அதற்கு நீங்கள் தான் உதவவேண்டும் என்றும் புரட்சித்தலைவரிடம் நட்பு ரீதியில் கேட்க, நண்பருக்காக உதவுவோமே என களத்தில் இறங்குகிறார் நமது புரட்சித்தலைவர். வெற்றியும் பெற்றுக்காட்டுகிறார்.
ஆம். கருணாநிதியை முதல்வராக்கினார் நமது இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். இது தான் வரலாற்று உண்மை. இதில் எந்த ஒளிவு மறைவுமில்லை.
மீண்டும் கட்சிப்பணியில் கவனம் செலுத்தி களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ய, 1971 இல் நடைபெற்ற தேர்தலில், தமிழக அரசியல் வரலாற்றில் அதிக பட்ச வெற்றியை பதிவு செய்தது திமுக. ஆம். புரட்சித்தலைவர் என்கிற ஒற்றை மனிதருக்காக ஒட்டுமொத்த தமிழகமும் கொத்துக் கொத்தாக வாக்களித்து வரலாற்று வெற்றியை பெற வைத்தார்கள்
பெருவெற்றி பெற்ற திமிரில், பொதுமக்களின் வரிப்பணத்தை அபகரித்து தவறான வழியில் பொருள் சேர்க்க, அது புரட்சித்தலைவரின் காதுகளை எட்ட, திருக்கழுக்குன்ற பொதுக்கூட்டத்தில், “திமுகவிலிருக்கும் MP MLA க்கள் தவறான வழியில் பணம் சேர்ப்பதாக செய்திகள் வருகிறது, ஆகவே MLA MP ஆவதற்கு முன் இருந்த சொத்து, தற்போதைய சொத்து நிலவரம் சமர்ப்பிக்க வேண்டும். அப்பொழுது தான் பொதுமக்களின் நம்பிக்கையை தக்க வைக்க முடியும்” என்றார்.
அண்ணா வழியில் கட்சி நடத்தும் நாம் தூயவராக இருத்தல் அவசியமன்றோ என்று தவறை தட்டிக்கேட்டார். தவறான வழியில் பணம் சம்பாதித்ததை தவறென சுட்டிக்காட்டி, இனி அவ்வாறு செய்தல் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
மீண்டும் ஆட்சியைப் பிடித்ததும் கருணாநிதியின் நயவஞ்சக குணமும் தனக்கேயுரிய ஈகோ யுத்தம், பித்தமாக தலைக்கேறி, ஒரு கட்டத்தில் திமுகவின் பொருளாளராக பொறுப்பு வகித்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை,
ஒரு 23 பொதுக்குழு உறுப்பினர்களின் உதவிகொண்டு, என்ன செய்துவிட முடியும் என்கிற இறுமாப்பில், தானே செல்வாக்கு பொருந்திய தலைவர் என்கிற தவறான அரசியல் புரிதலில், பொன்மனச்செம்மலை கட்சியை விட்டே நீக்குகிறார் கருணாநிதி 1972 – அக்டோபர் 10 ந்தேதியில்.
ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சியில், ஆங்காங்கே கலவரம், கடையடைப்பு, பேருந்து நிறுத்தம், புரட்சித்தலைவர் வாழ்க சொன்னால் மட்டுமே தெருவில் நடமாட முடியும் என்கிற நிலை.
அக்டோபர் பத்தில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட புரட்சித்தலைவர் அவர்கள், ஒரே வாரத்தில், ஏகோபித்த தொண்டர்களின் ஆதரவோடும், பொதுமக்களின் அன்புக் கட்டளையை ஏற்றும், கட்சியை ஆரம்பித்தார்
அப்படி உருவானது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கம்
மதுரை தமுக்கம் மைதானமே மிதந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல. மொத்த தமிழ்நாடும் மதுரையில் சங்கமித்திருந்தது என்று சொல்வதே சரியாக இருக்க முடியும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கியாகிற்று.
மதுரை தமுக்கம் மைதானத்தில் – தமிழ்நாட்டின் தீயசக்தியை ஒரு தூய சக்தி அடையாளம் காட்டியது. ஆம்.
தீயசக்தி கருணாநிதி – இந்த ஒற்றை வாசகம் பட்டிதொட்டியெங்கும் அண்ணாதிமுகவினரால் கருணாநிதியை விமர்சிக்க பயன்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து,
தீயசக்தி கருணாநிதி – அந்த தீய சக்தியை அழிக்கவந்த
தூயசக்தி புரட்சித்தலைவர் எம்ஜியார்
இது தான் அண்ணாதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட இலட்சிய வாசகங்கள்
வஞ்சகனின் நெஞ்சத்தை, துரோகச் செயலின் சக்கரவர்த்தியை, பொறாமை குணத்தின் பெருவேந்தனை, வயிற்றெரிச்சலின் பேரரசனை ஆம். தீய சக்தி கருணாநிதியின் முகத்திரையை தமிழ்நாட்டிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார் நமது இதயதெய்வம் புரட்சித்தலைவர்.
தொண்டர்கள் வெகுண்டெழுந்தார்கள். அன்றிலிருந்து அந்த தீயசக்தியை எதிர்ப்பதே எங்கள் வாழ்நாள் இலக்கு என்று சூளுரைத்தார்கள்
“நடிகருக்கும், நடிகரின் நூறு விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும், அரசியலைப்பற்றி என்ன தெரியும்?”, என்று கேலியும் கிண்டலும் சீண்டல்களும், படப்பெட்டிகளை கடத்தும் ரவுடியிசமும், அண்ணாதிமுகவை அடியோடு புதைத்துவிட துடித்த நிகழ்வுகளும் கொஞ்சமா நஞ்சமா..? எண்ணிலடங்கா துரோகங்களும் தொல்லைகளும் தினந்தோறும் உருவாக்கினார் கருணாநிதி
தீயசக்தியின் தொடர் தொல்லைகளை எல்லாம் புரட்சித்தலைவர் தன் மதிநுட்பத்தாலும் மாபெரும் செல்வாக்காலும் தொடர்ந்து தோற்கடித்தார்.
தமிழக அரசியல் தனது ஒட்டுமொத்த முகத்தையும் மாற்றியிருந்தது. முதல் முறையாக ஒரு அப்பழுக்கற்ற தலைவனின் அரும்பெரும் சேவைகளை அரவணைக்க தொடங்கியிருந்தது.
அதன் பிறகு 1977 , 1980 மற்றும் 1984 ஆகிய மூன்று சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் பெரும் வெற்றியை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தலைமையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக கழகம் பெற்று ஆட்சியை பிடித்தது.
தமிழ்நாட்டின் முகம் முதன்முதலாக முற்றிலுமாய் மாறக் காத்திருந்தது என்றே சொல்லலாம். 1977 க்கு முந்தைய தமிழகத்தின் முகம், பசியால் வாடியிருந்தது. உயர்கல்வியில் உயரமுடியாமல் முட்டி முட்டி மோதிக்கொண்டு இருந்தது, சமூக நீதியில் சங்கடங்களை சந்தித்துக்கொண்டிருந்தது. பெண்கள் முன்னேற்றத்தின் பாதை முட்களால் நிரப்பப்பட்டிருந்தது.
மக்களின் எண்ணவோட்டங்களை அட்சுரம் பிசகாமல், அறிந்திருந்த மக்கள் தலைவன் மன்னாதி மன்னன் புரட்சித்தலைவர் அவர்கள், முதல்வரான பிறகு தான், தமிழ்நாட்டின் தலையெழுத்து திருத்தி எழுதப்பட்டது.
பல்கலைக்கழகங்கள், நவீன மருத்துவக் கல்லூரிகள், பாரம்பரிய சித்தா, யுனானி பல்கலைக்கழங்கள், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், மகளிர் பல்கலைக் கழகம், அமைத்தது முதல், மாணவர்களுக்கு சத்துணவு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பயிர் பாதுகாப்பு கடன், இடுபொருள், விதை மானியம், குடிசை மின் விளக்கு, கிருஷ்ணா கூட்டு குடிநீர் திட்டம், இந்தியாவிலேயே முதன் முதலாக இலவச ஆம்புலன்ஸ் திட்டம், பொங்கலுக்கு இலவச வேட்டி & சேலை வழங்கும் திட்டம், நகரங்களில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்,
ஒவ்வொரு மாவட்டத்திலும் நூலகத்திற்கு என தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டது முதல் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கியவர்.
பொது விநியோக திட்டத்திற்காக 20,000 ரேஷன் கடைகளை ஒரே கட்டத்தில் திறந்து வைத்தது மட்டுமல்லாது, தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் அரிசி ஒதுக்கீட்டினை போராடி பெற்றார் புரட்சித்தலைவர். சத்துணவு திட்டம் செயல்படுத்தும் போது ஒரே நாளில் 10,000 சத்துணவு அமைப்பாளர்களை பணி நியமனம் செய்தார் புரட்சித்தலைவர் அவர்கள்
மாநிலம் முழுதும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க வழி செய்தார் புரட்சித்தலைவர் அவர்கள்
தமிழில் தந்தை பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தவர். தந்தை பெரியாருக்கும், பாரதிதாசனுக்கும் நூற்றாண்டு விழா நடத்தியவர். அரசு அலுவலக கடிதங்கள் / அரசாணைகளில் திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்தியவர் புரட்சித்தலைவர் அவர்கள்
சென்னைக்கு கிருஷ்ணா குடிநீரை கொண்டு வந்தவர். பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்த சந்தேக கேஸ் எனப்படும் 41 பிரிவு சட்டத்தை நீக்கியவர் புரட்சித்தலைவர் அவர்கள்
குறிப்பட்ட சமூகத்தினர் கோலோச்சிய கிராம முன்சீப் நடைமுறையை ஒழித்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பணியாளர்கள் பதவிகளை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர் அவர்கள்
கிராமப்புற பேருந்து வசதிக்காக 4000 க்கு மேற்பட்ட வழி தடங்கள் புரட்சித்தலைவர் அவர்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. மகளிருக்கு சிறப்பு பேருந்தும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதன் முதலில், தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு (இன்சுரன்ஸ்) முறையை அறிமுகப்படுத்தியவர் புரட்சித்தலைவர் அவர்கள்
1980- 1985 காலத்தில் தொழில்நுட்பக் கல்வியை விரிவுப்படுத்துவதில் மத்திய / மாநில அரசுகளுக்கு பொருளாதார சிக்கல்கள் இருந்ததால், சுயநிதி கல்லூரிகளை நிறுவ மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி தமிழ்நாடு, கர்நாடகம், மஹாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் பொறியியல் கல்லூரிகள் அதிகப்படுத்தப்பட்டன. தமிழகத்தில் இன்று லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் உருவாக காரணமாயிற்று.
இதைத் தவிர, விதவை, முதியோர் மற்றும் மாற்று திறனாளிகள் ஓய்வூதியம், பள்ளி மாணவர் சீருடை, மீனவர் , நெசவாளர்களுக்கு கடனுதவி, ஏழைகளுக்கு குடியிருப்பு கட்டுதல், ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டம், பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு என ஏராளமாய் செய்தார் புரட்சித்தலைவர் அவர்கள்
ஈழப் பிரச்சனையில் அவரது துணிச்சலான நடவடிக்கைகள், நிதியுதவி, பொருளுதவிகள் மறக்க முடியாதவை. போராளிகளை நாடு கடத்த முடியாது என்பதில் உறுதியாய் இருந்தது முதல் தமிழகமெங்கும் விடுதலைப் புலிகள் கண்காட்சி நடத்தவும், நிதியுதவி திட்டவும் அனுமதி அளித்தது வரை என ஈழ உணர்வை தமிழ் மண்ணில் விதைத்தவர், புரட்சித்தலைவர் அவர்கள்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளிலும், பண்பாடுகளிலும், கொடையிலும், முரட்டுப் பாசத்திலும் ஒன்றோடொன்றாக, நகமும் சதையுமாய், தேனும் தமிழுமாய், தன் வாழ் நாளையே சரித்திர புத்தகமாய் சமர்ப்பித்த, தங்கத்தலைவன், தமிழன்னை தனக்காக பெற்றெடுத்த தலைப்பிள்ளை, பொன்மனச்செம்மல் அவர்கள், உடல்நலக்குறைவால் 1987 டிசம்பர் திங்கள் 24 ஆம் நாள் இயற்கை எய்தினார்.