மக்களால் இயற்கையாக நேசிக்கப்பட்ட கட்சி கழகம். எத்தனை ஆயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் கழகத்தை இனிமேல் வீழ்த்த முடியாது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் ஏற்பாட்டில் ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேலம் புறநகர் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் தேசம் மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் 1,300க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- ஆத்தூர் நகரில் எழுச்சியோடு சிறப்போடும் நடைபெற்று கொண்டிருக்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி, கழகம் கூடுதல் பலம் பெற்று இருக்கும் இந்த வேளையில், மக்கள் தங்களை இணைத்துக்கொண்டு இருக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க., பா.ம.க. தே.மு.தி.க., வி.சி.க, ரஜினி மன்றம், நாம் தமிழர் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து விலகி கழகத்தில் இணைத்துக் கொள்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களையும் வரவேற்கிறேன். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வீழ்ந்து விட்டது. அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலே தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 இடங்களிலும் வெல்வோம் என்று சொல்கிறார். அவர் அதை நேற்று சொன்னார். இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எப்பொழுதும், எந்த தேர்தல் வந்தாலும் வெற்றிபெறும். வெற்றி பெறுவதற்கு மாற்று கட்சியில் இருந்து வருகை தந்து அவர்களும் இணைந்து கொண்டு கழகத்திற்கு வலுசேர்க்கும் விதமாக வருகின்ற தேர்தலின்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு, கழகம் நிறுத்துகின்ற வேட்பாளர்களை வெற்றிபெறசெய்வோம் என்று? சூளுரைத்து இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். எத்தனை ஆயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் கழகத்தை இனிமேல் வீழ்த்த முடியாது. அந்த சக்தி ஸ்டாலினுக்கு கிடையாது. கழகம் சாதாரண மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி, பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட சாமானிய மக்கள் மூலமாக உருவாக்கி போட்டியிட கட்சி கழகம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இருக்கின்றபோது எவ்வளவு இடையூறு செய்தீர்கள், அத்தனையையும் தவிடுபொடியாக்கி கழக ஆட்சியை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அதேபோல பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு சோதனைகளை தாங்கி, தி.மு.க என்னனெவெல்லாம் பிரச்சினைகளை உருவாக்கியது அதையும் தவிடுபொடியாக்கி மக்கள் துணையோடு மீண்டும் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சியை தமிழகத்தில் உருவாக்கி காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா. இன்றைக்கு நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் நாட்டு மக்களுக்காக உழைத்த தலைவர்களின் வரிசையிலே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் தான் பார்க்க முடிகிறது. ஏனென்று சொன்னால் இவர்களுக்கு குடும்பம் கிடையாது, புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு குடும்பம் இருந்தது. ஆனால் வாரிசுகள் இல்லை. இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு நாம் தான் வாரிசுகள். ஆகவே மக்களை தான் வாரிசாக பார்த்தார்கள். கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தான் பிள்ளைகளாக பார்த்தார்கள். ஆகவே இருபெரும் தலைவர்கள் மக்களுக்காக தோன்றி மறைந்த ஒப்பற்ற தலைவர்களை உருவாக்கிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். ஆகவே எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அந்த சோதனைகளை எல்லாம் தாண்டி வெற்றிநடை போடுவதற்கு காரணம், இயற்கையாக மக்களால் நேசிக்கப்பட்ட கட்சி கழகம். இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.